அரசியல்

Friday, June 17, 2016

குலக்கல்வியைக் கொண்டுவர கோடை விடுமுறையைப் பயன்படுத்த தினமணி சூழ்ச்சி

- மஞ்சை வசந்தன்
குலக்கல்விக்கு கொல்லைப் புறவழி, குறுக்குவழி என்று பல வழிகளில் முயற்சி செய்து வரும் ஆரிய பார்ப்பனர் கூட்டம், அம்முயற்சியை விடுவதாக இல்லை.
அசல் ஆரிய பார்ப்பன ஏடாக மாறிவிட்ட தினமணி இளைஞர் மணியில் (29.03.2016) நல்லது கூறும் பாணியில் நலிந்த பிரிவு மாணவர்களின் உயர்நோக்கைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றது.
படிக்கும்போதே கைத்தொழில் ஒன்றைக் கற்கவேண்டும். இதற்கு பெற்றோர் ஆவன செய்ய வேண்டுமாம். இதனால் +2 முடிக்கும்போது ஒரு தொழிலைச் செய்ய தயாராகிவிடுவார்கள் என்கிறது தினமணி.
நம்முடைய எதிர்க் கருத்துக்களைக் கூறுவதற்கு முன் இந்த தினமணி வகையறாக்களுக்கு நாம் கூறுவது இதுதான்.
சரி. நல்ல யோசனைதானே! நல்ல பயன்கள் இருக்கிறதுதானே... ஆரிய பார்ப்பனர் வீட்டு பிள்ளைகளை முன் மாதிரியாக சைக்கிள் பஞ்சர் ஒட்டுதல், தையல், ஒயரிங், புத்தக பைண்டிங், மெக்கானிக் வேலை, முடிவெட்டுதல் போன்ற எல்லா வேலைகளுக்கும் பயிற்சி எடுக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மற்ற பிள்ளைகளை அனுப்புவதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு எதிரல்லவா?
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் இப்படி பயிற்சியென்ற பெயரில் தொழில் செய்யச் சொன்னால் சிறார் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்களே! அது சட்ட விரோதம் அல்லவா?
படிக்கின்ற பிள்ளைகளின் சிந்தை அதில்தான் செல்ல வேண்டும். ஓவியம், பாடல், ஆடல், எழுதுதல் போன்ற திறன் வளர்த்தல் வேறு, தொழில்கள் பயிலல் வேறு.
தொழிற்கல்வி உண்டே
பள்ளிகளிலே நெசவு, ஓவியம், தையல், வேளாண்மை போன்ற தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனவே.
அதை முறைப்படுத்தினாலே போதுமே.
மேல்நிலை வகுப்புகளில்
மோட்டார் மெக்கானிக், ரேடியோ டி.வி. மெக்கானிசம், ஒயரிங், மோட்டார் ரீஒயின்டிங் போன்ற தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனவே.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ஏதோ இவர்கள் இளைஞர்களின்மீது அளவுகடந்த அக்கறையுள்ளவர்களாய்க் காட்ட முற்படுவது மோசடியானது.
“ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்!’’. அந்த கதை இவர்களுக்கு இம்மியளவும் பிசகின்றிப் பொருந்தும்.
கவனம் சிதற, கல்வியை விட வழிவகுக்கும்
இதுபோன்று படிக்கின்ற பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பயிற்றுவித்தல், குலத்தொழிலைப் பயிற்றுவித்தல் என்று பயிற்சியளித்தால் அவர்களின் கவனம் படிப்பிலிருந்து புரளும்.
சிலர் கல்வியையே கைவிடுவர். எனவே, படிக்கின்ற மாணவர்கள் அதில் முழுமையாகக் கவனம் செலத்தி, தனித்திறன் பெற்றுச் சாதிக்கிக வேண்டும். கல்வி என்பது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்திற்குமானது.
படித்து முடித்த பின்
படிக்க வேண்டிய அளவு படித்த பின், ஏதாவது ஒரு தொழிலை விருப்பப்படி வாய்ப்புள்ளவர்கள் பயிலுதல் தவறல்ல. ஆனால், தினமணி கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களின் கற்றலை சீர்குலைக்கும் சூழ்ச்சியாகும்.
கோடை விடுமுறை வரவிருப்பதால், அந்த விடுமுறையில் தங்கள் சூழ்ச்சிக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களை பலியாக்கும் தினமணியின் திட்டமாகும் இது. பெற்றோர் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment